Saturday, May 30, 2009

லீலாவதி இருக்க முடியாத அமரிலா தன்னை விற்றுக்கொள்ளப் போயிருப்பாள்?

லீலாவதி!


"சோடாமூடி முதல் லீலாவதி வரை
வைரமாளிகையில் இருந்து
எட்வின் வரை!"

கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் 4 குழந்தைகளின் தாயான 33 வயதுடைய லீலாவதி என்ற பெண் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டதாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சோட்டீ அணிந்த நிலையில் அந்த ஏழைத்தாய் இறந்து கிடந்த காட்சி சில மின்னணு ஊடகங்களில் வெளிவந்திருந்தது. புலிகளின் இணையத்தளங்களான புதினம், நிதர்சனம், சூரியா.உழஅ என்பன லீலாவதி ஒழுக்கக்கேடான நடத்தைக்காக, கலாச்சார சீரழிவுக்காகத் தண்டிக்கப்பட்டதாய் நியாயம் எழுதின. தமிழ்த் தேசியவாதத்தின் ஊடகப் பயங்கரவாதிகளுக்கு லீலாவதியின் மரணம் ஒரு ஒழுக்கங்கெட்டவளின் மரணம், நடத்தை கெட்டவளின் சாவு என்பதைக் கடந்து எதுவுமில்லை. அவர்களின் தமிழ்ஈழம் லீலாவதியைக் கொன்றதன் ஊடாக பரிசுத்தமானது. கற்புடமைக்கு நேரிட்ட பெரும் ஆபத்து நீங்கியது.

புலிக்கொலைஞர்களின் துப்பாக்கி அந்த ஏழைத்தாயின் முன்பு நீட்டப்பட்டபோது, சாவு அவளை நெருங்கிவந்தபோது, அந்தக் கடைசிக் கணங்களில் அவள் எதை நினைத்திருப்பாள்? தான் மரணித்தால் தாய்தேப்பனைத் தின்றவர்களாகக் கருதப்படப்போகும் தன் நான்கு குழந்தைகளை, ஒருவேளை தான் அதிகம் பரிவுகாட்டிய கடைசிக் குழந்தையை எண்ணியழுதிருப்பாள். தன் உயிருக்காக, மண்ணில் வாழும் உரிமைக்காக கெஞ்சி மன்றாடியிருப்பாள். இதற்குப் பதிலாக புலிப்பாசிட்டுகள் தமது இலக்குத் தவறாத சுடும் திறமையை மிகச்சிறப்பாக நிரூபிக்க முயன்றிருப்பார்கள். லீலாவதியின் பல ஆயிரம் மில்லியன் ஆசைக்கனவுகளைக் கொண்ட மூளையையும் குழந்தைகளுக்காக இரங்கிவந்த இருதயத்தையும் குறி தப்பாமல் சுட்டு சிதறடித்திருப்பார்கள். உலகில் மிகச்சிறந்த தாயன்பை லீலாவதியின் குழந்தைகள் இன்று இழந்துவிட்டனர்.

புலிகள் சோழர்களின் இலட்சனையான புலியைக் கொடியாய்க் கொண்டவர்கள், தமிழீழத்தின் மனுநீதிச்சோழன் பரம்பரையினர் தாமே என்பதை நம்ப மறுப்பவர்களையும் சந்தேகம் கொண்டவர்களையும் கொன்றுதள்ளி மனு நீதியினை மனித இரத்தத்தால் உரைப்பவர்கள். புலிகள் தமிழ்ஈழச் சட்டம், கோடு, கச்சேரி, பொலிஸ் என்று வைத்திருந்தபோதும் லீலாவதி எங்கும் நிறுத்தி விசாரிக்கப்பட்டு அவரது குற்றம் குறைந்தபட்சமாவது நிரூபிக்கப்பட்டதா? அதன்பின்பு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டதா? தன் தரப்பு நியாயம் எதையாவது சொல்ல லீலாவதிக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? தன்மீதுள்ள குற்றச்சாட்டை மறுப்பதற்கு இடம் தரப்பட்டதா? இயற்கையின் குழந்தைகளான மனிதர்களைச் சூழவுள்ள பொருளாதார வாழ்வு நீதியாகப் பங்கிடப்படாதவிடத்து, அதனால் மனிதத் தேவைகளை நிறைவு செய்யமுடியாதபோது திருட்டு, மோசடி, விபச்சாரம், கொலை என்பன உருவாகின்றன. நன்மை, தீமை கொண்ட பண்புகளை உடைய மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள். வர்க்கரீதியான சமூகக் கட்டமைப்பு மனிதர்களையும் மனித ஒழுக்கத்தையும் அலட்சியப்படுத்தும், பொதுவான சமூக விதிகளை மீறும் போக்குக்கு மக்களை இட்டுச் செல்கிறது. தவறுகளையே உற்பத்தி செய்யும் முதலாளிய சமூக அமைப்பை வைத்துக் கொண்டு திருடாதே, பொய் சொல்லாதே, பாலியல் ஒழுக்கத்தை மீறாதே என்று போதிப்பது பயன்படாது. காதலுக்காகவன்றி பொருள், பண்டம் ஈட்ட, வறுமையுள் இருந்து விடுபட பெண்கள் பாலியல்ரீதியாக தம்மை விற்றுக் கொள்வதை முதலாளிய அமைப்பை வைத்துக் கொண்டு தீர்க்க முடியாது. சமுதாயத்தைப்பற்றியோ அல்லது மனிதர்களைப்பற்றியோ புலிப்பாசிட்டுகளுக்கு என்ன தெரியும்?

ஜேர்மனியில் இரண்டாம் உலக யுத்த முடிவில் கணவன், பெற்றோர், சமூகப் பாதுகாப்பு இவைகளை இழந்த பெண்களில் ஒருபிரிவினர் மிகப் பெரிய பாலியல் சீரழிவுக்குட்பட்டார்கள். தம்மை வெற்றிகொண்ட அமெரிக்க, பிரிட்டி~;, பிரான்ஸ், சோவியத் படைவீரர்கள் மத்தியில் தம்மைப் பாலியல் பண்டமாக்கிக் கொள்வதுவரை அவர்கள் சென்றார்கள். இவற்றினூடு போர்க்காலத்தின் பொருளாதாரக் கொடுமையிலிருந்து தப்பிக்க முயன்றார்கள்

தூய வெள்ளை ஆரிய இனப்பெருமை பேசிய ஹிட்லர் ஆட்சி செலுத்திய தேசத்தில் அமெரிக்க இராணுவத்திலிருந்த அமெரிக்க கறுப்பு இன இராணுவ வீரர்களின் உடலடையாளங்களோடு பெருந்தொகைக் குழந்தைகள் ஜேர்மனியில் பிறந்தன. சோவியத் வீரர்களோடு உறவு கொண்டதால் 20,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததாக கணக்கீடுகள் உள்ளன. "ஒரு பியர் போத்தலுக்கும் ஒரு சொக்கிலேட் பக்கற்றுக்கும் ஒரு ஜேர்மனியப் பெண்ணைப் பெற முடியும் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளன் அக்காலத்தில் எழுதினான். யதார்த்;தத்தில் போர்க்காலத்தின் பொருளாதாரக் கட்டளைகளின் முன்பு இன மேன்மைக் கோட்பாட்டுக் கற்பனைகள் யாவும் பணிந்தன. சமூகத்தில் பசியும் பட்டினியும் நிலவியபோது ஒழுக்கம். உயர்பண்பு பற்றிய போதனைகள், உயர் இனம் சார்ந்த தூய்மைக் கோட்பாடுகள் தாமாகவே கைவிடப்பட்டன. இந்த நிலமைகளில் முதலில் பலிகொடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பொதுவாகவே ஆகப் பலம்குன்றியவர்களாயிருக்கும் பெண்களேயாவர். சகல யுத்தங்களிலும் இதுவே விதியாக இருந்தது. வியட்னாம் முதல் இலங்கைவரை பெண்களுக்கு நடந்தது இதுதான். போர்க்காலப் பொருளாதார நிலமைகள் இந்த நிலைக்குப் பெண்களைத் தள்ளின. பாலியல் நோய்களும,; பாலியல் ஒழுக்கமீறல்களும,; உளவியல் நோய்களும், தற்கொலைகளும் அவர்களைச் சூழ்ந்துகொண்டன. வியட்னாம் யுத்தகாலத்தில் பலபத்தாயிரம் அமெரிக்க இராணுவத்தினர் தாய்லாந்தில் இருந்தனர். அங்கிருந்த வறுமையானது ஒருபிரிவுப் பெண்களை அமெரிக்க இராணுவத்தை அண்டிவாழும் பாலியல் சீர்கேட்டிற்கு இட்டுச்சென்றது. இன்று தாய்லாந்துப் பெண்கள் முழு ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பான் முதல் அவுஸ்திரேலியாவரை பாலியல்பண்டமாக விற்கப்படுகின்றனர். தாய்லாந்து என்றால் பாலியல் தொழிலுக்கான நாடாகிவிட்டது. முதலாளியப் பொருளாதாரம் உள்ளவரை இச்சீர்கேட்டை அழிக்கமுடியாது.


புலிகள் ஜேர்மனிய நாசிகளைப்போல், இத்தாலியப் பாஸிட்டுகளைப் போல், இந்திய இந்துமதவெறியர்கள்போல், தலிபான்களைப் போல் பெண்களின் தூய பாலியல் நடத்தையைக் கோருகிறார்கள். பாலியல் ஒழுங்குமுறைகளைக் கையேற்கத்தக்க சூழல்கள் சமுதாயரீதியில் சாத்தியமற்றநிலையில் பெண்களை வைத்துக்கொண்டு அவர்களை எப்படித் தண்டிக்க முடியும்? திருத்த முடியும்? பழந்தமிழ் சமூகம் பரம்பரை பரம்பரையாக கற்பை கண்ணைப்போல் போற்றி வந்தது என்பது இலக்கியவகைப்பட்ட கட்டுக்கதை. மனிதர்கள் எல்லோரும் ஆதியில் மனித மாசிசமும்; பச்சை இறைச்சியும் உண்பவர்களாக இருந்தார்கள் என்பது எப்படி உண்மையோ அப்படியே வரைமுறையற்ற பாலியல் உறவுகளையும் வரம்புமீறல்களையும் தாண்டியே மனித இனம் இன்றைய பாலியல் ஒழுக்கத்தை வந்தடைந்துள்ளது. தமிழர்களின் பழங்காலம் கண்ணகிகளும் கற்புக்கரசிகளும் நிறைந்த காலமாக இருந்தது என்பது அதீதமான கற்பனையே. இலக்கியவகைப்பட்ட அறிதல் மட்டுமே. உண்மையில் இவைகட்கு நேரெதிர்ப் பண்புகள் வாய்ந்த பெண்களே பசியும் வறுமையும் சமூகத்தில் குறைந்தமட்ட பொருளாதார உற்பத்தி ஆற்றலும் கொண்ட அக்காலத்தில் வாழ்ந்திருக்க முடியும். பெண்களைக் கடத்தல், பாலியல் வன்முறை, குழந்தைத் திருமணம், தகாப்பாலியல் உறவுகள், கருச்சிதைவு, குழந்தைப் பாலியல், விலைமாதர் என்ற போக்குகள் அன்றைய சமூகம் முழுவதும் விரவியிருந்தன என்பதை மிகவும் சுலபமாக நாம் நிறுவிவிட முடியும்.


ஆனால் புலிப்பாசிசமோ இறைவனைத் தொழாமல் கணவனைத் தொழுது வாழ்ந்த காலமே பழந்தமிழ் சமூகம் என்று நிரூபிக்க முடியுமென நம்புகிறது. எமது வேதங்கள், புராணங்கள், இலக்கியங்கள் என்பன பாலியல் மீறலாலும் விலைமாதராலும் நிரம்பிக் கிடக்கின்றன. மனித இயற்கையான பாலியல் உணர்வுகள் கண்மூடித்தனமான சமுதாயக் கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டபோதும், பொருளாதாரக் காரணிகளால் சீர்கெடுக்கப்பட்டபோதும் சிதைந்த, விகாரப்பட்ட வடிவில் வெளிப்பட்டது. ஆண்களுக்கு சேறு கண்ட இடத்தில் மிதித்து குளம் கண்ட இடத்தில் கழுவும் உரிமை கிடைத்தது. முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த உடையார், மணியகாறர்மாருக்கு ஊருக்கு ஊர் பொம்புளையும் பிள்ளைகளும் இருந்தார்கள். இவை பெருமையாய்க் கருதப்பட்டனவே ஒழிய ஒழுக்கக்கேடான, பாலியல் தடைகளை மீறும் செயலாகக் கொள்ளப்படவில்லை. ஆனால் பெண்கள் மாத்திரம் பாலியல் ஒழுக்கவிதிகளால் சுற்றிவளைக்கப்பட்டனர். இதனாலேயே பெண்கள் இவைகளை இரகசியமாய் மீறினார்கள். கண்காணிப்புகளையும் சமூகநெறிகளையும் மீறவல்ல தந்திரமும் சூழ்ச்சியும் சாகசமும் கொண்டவர்களாக மாறினார்கள். முன்பு பாலியல் கட்டுப்பாடு கொண்ட எமது கிராமங்களின் இளம் கன்னிகள் தம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பேய் பிடித்து ஆடினார்கள், தமது ஆடைகளைக் கிழித்து பொருட்களை உடைத்து அட்டகாசம் பண்ணினார்கள். இளைஞர்கள், சுயபாலியல், சமபாலியல் உறவுக்கும் சிறு ஆண், பெண் குழந்தைகளைக் கெடுக்கவும் முனைந்தார்கள்.

இயற்கையான பாலியல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டபோது அவை கள்ளத்தனமாய் விகாரமாய் வெளிப்பட்டன. கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்புகள் வைத்திருந்த பெண்கள் சாதாரணமாக இருந்தார்கள். கணவன் இல்லாதவர்கள், நோயாளியான கணவனைக் கொண்டவர்கள், துணிச்சல் மிகுந்தவர்கள் பலர் தத்தம் உடற்தேவை சார்ந்து பாலியல் உறவுகளைக் கொண்டிருந்தார்கள். இவர்கள் விலைமாதர்களாக இருக்கவில்லை என்பதுடன் கண்டும் காணாமலும் முதுகுக்குப் பின்னாலான விடுப்பு, வசைமொழிகளுடன் சகித்துக் கொள்ளப்பட்டனர். யாழ்க்குடா நாட்டின் சைவ வேளாள நடுத்தர வர்க்கம் சைவ மங்கையர் பள்ளிகள், இந்து மகளிர் கல்லூரிகள் வளர்ப்பு ஊடாக பாலியல் ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கொண்டிருந்தது. பாலியல் ஒழுக்கம் சார்ந்த வேடமிட இவர்கள் பயிற்றப்பட்டனர். ஆனால் கிழக்கில், வன்னிப் பகுதியில், மலையகத்தில், யாழ்ப்பாணத்தைப்; போல் போலி அனுட்டானம் மிகவும குறைவாக இருந்தது. யாழ்குடா நாட்டுக்குள்ளும் ஏழைகள், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் ஆகியோரிடம் ‘ஆறுமுக நாவலர் மற்றும் இராமநாதன் கல்லூரிகளின்; பண்பாடுகள’; காணப்படவில்லை. வன்னிப் பகுதியில் நெல் அறுவடைக்காலம், மிளகாய்ப்பழம் புடுங்கும் காலங்களில் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட மலையகப் பெண் தொழிலாளர்கள் பெரும் பகுதியாய் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இலகுவாகப் பணிந்தனர். கற்பு பாலியல் ஒழுக்கம் சார்ந்த போலியுணர்வாளர்கள் ஒழுக்கம் மீறியதான உளவில் சார்ந்த குற்றவுணர்வுகள் தமிழ்த் தேசியம் தற்போது வடிவமைக்கும் மட்டத்திற்கு அவர்களிடம் செயற்படுவதில்லை.

யாழ் குடாநாட்டில் பொருளாதாரரீதியாக தாழ்நிலையில் உள்ள மக்களிடம் பாலியல் ஒழுக்கம் தீவிரமான நிலையில் இருக்கவில்லை. கிராமங்களில் நிகழும் சண்டை சச்சரவுகளில் ஆண்கள் மட்டுமல்ல் பெண்களும் தமது ஆடைகளைத் தூக்கி பாலுறுப்புகளைக் காட்டி தம் எதிரிகளான ஆண், பெண்களை அவமானப்படுத்தினார்கள். 1970களில் கூட யாழ் குடாநாட்டின் சில சந்தைகளில் அரிசி விற்பனை செய்யும் குந்தி இருந்து அரிசி அளக்கும் வயதான பெண்கள் தமது சீலையைச் சிரைத்துவிட்டு அரிசியைக் குறைவாக அளந்து விடுவார்கள். எனவே பாலியல் ஒழுக்கம் என்பது இயற்கையின் வேண்டுதலுக்கு மட்டுமல்ல பொருளாதாரக் காரணிகட்கும் பணிந்து வழிவிட்டதேயாகும். தனது பிள்ளைகட்கு தன் உணவைக்கூடத் தந்துவிட்டு தான் பட்டினியாகக் கிடக்கும் தாய், வளர்ந்து நிற்கும் குமர்ப்பிள்ளைகளைக் கரைசேர்க்க வழி கேட்டு கோவிலில் நின்று அழுது கடவுளிடம் மன்றாடும் தாய், பெண்பிள்ளைகளுக்கு நகைநட்டுச் சேர்க்கவென்று அரிசிச்சீட்டு முதல் காசுச்சீட்டு வரை பிடிக்கும் தாய், யாழ் குடாநாட்டுக்குள் மிகவும் அண்மைக்காலம்வரை நிலவிய யதார்த்தம். போதுமான உற்பத்திவலு இல்லாத பொருளாதாரத்தில் சுய ஆற்றல் வளராத சமூகங்களில் பெண்கள் அதிகமான உடல் உழைப்பையும் தியாகங்களையும் சுய ஒறுப்பையும் செய்யவேண்டியிருந்தது. இவர்கள் விரைவாக முதுமையுற்று இறந்தனர்.

லீலாவதி இருக்க முடியாத அமரிலா தன்னை விற்றுக்கொள்ளப் போயிருப்பாள்? தன் குழந்தை குஞ்சுகளைப் பாதுகாக்க, அவர்களின் பசித்த வயிறுகட்கு கஞ்சி வார்க்கத்தான் போயிருப்பாள். போர்க்காலம் வராமலிருந்தால் சமூகம் பழிக்கும் இந்த மானம்கெட்ட தொழிலுக்கு அவள் போயிருக்க மாட்டாள். யுத்தகால வாழ்வானது பெண்களை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தது. அவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓடினார்கள். வீடுகளிலும் வயல்களிலும் தோட்டத்திலும் உழைத்தார்கள். துணையில்லாமல் கோயிலுக்குக் கூடப் போகாத பெண்கள் நீண்டதூரம் தனியே பயணித்தார்கள். குழந்தைகள், குமர்ப்பிள்ளைகள், வயதானவர்களைப் பொறுப்பெடுத்து அகதியாய் அலைந்தார்கள். பட்டினி கிடந்தார்கள். பாலியல் வன்முறைக்காளானார்கள். பாலியல் விதிகளை மீறி நடந்து உளநோய்களுக்கு ஆளானார்கள். ஆண்களைவிட சமூக பொருளியல் துன்பங்களை பெண்களே அனுபவித்தார்கள்.

எந்த நாகரீகமான நாட்டிலும் இன்று பாலியல் ஒழுக்கத்தை மீறிய பெண்களைக் கொல்வதில்லை. மேற்குலக நாடுகளில் விலைமாதர்கள் சட்டபூர்வமான பாதுகாப்புடன் தொழில் புரிகின்றனர். மருத்துவப் பரிசோதனை, காப்புறுதி, ஓய்வூதியம் என்பன உண்டு. ஜேர்மனியில் விலைமாதர்கள் பலர் தம் சொந்த அமைப்புகளைக் கொண்டுள்ளனர். "ர்ஓகுசுயு" என்ற ஜேர்மானிய விலைமாதர்களின் அமைப்பு பல பத்தாயிரம்பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. போர், ஆக்கிரமிப்பு என்பவற்றை எதிர்க்கும் விலைமாதர்களின் அமைப்புகள்கூட உள்ளன. பெண்கள் பாலியல் பண்டமாவதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் மனித அவமானம்தான். ஆனால் முதலாளிய அமைப்புகள் பெண்களைப் பண்டமாக்கி நுகரும் பொருட்களின் வரிசைக்குத் தள்ளிவிட்டன. ஜேர்மனிய விலைமாதர்கள் தமது மார்பு உறுப்பு உட்பட தமது அங்கங்கள், தலைமயிர், உயரம் உட்பட சகலதையும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துகிறார்கள். ஆண்கள் அதைப்பார்த்து தமது ரசனைக்கும் விருப்புக்கும் ஏற்ப பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சந்தையில் பெண்கள் பரப்பப்பட்டு தேர்வுக்கு விடப்படுகிறாள். முதலாளியத்துள் பெண்ணுக்கு இதுதான் சுதந்திரம், சோசலிய நாடுகளில் பாலியலைத் தொழிலாக்குவதை எதிர்த்து தடை செய்து அந்த தொழிலில் ஈடுபட்ட பெண்களை வேறு தொழில்களில் பயிற்றுவித்து மனிதப் பிரஜையாக மாற்றினார்கள். போல்சுவிக்குகள் விலைமாதர்களைப் புரட்சிக்காரிகளாக மாற்றிய வரலாறு இருக்கிறது.


மத்திய காலத்தில் ஐரோப்பாவில் பாலியல் ஒழுக்கம்மீறிய பெண்களை கல்லால் எறிந்து கொன்றார்கள். உளவியல் பாதிப்புடையோர், சிவப்புத்தலை முடி உடையவர்கள், உடலில் மச்சம் உடையவர்கள், சூனியக்காரிகள், சாத்தானுடன் தொடர்புடையவர்கள் என்று கொல்லப்பட்டனர். அதிக குளிரோ பனியோ ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டபோது பெண்கள் மத்தியில் சூனியக்காரிகள் தேடப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். புலிகளின் கலாச்சாரமீறல், பாலியல் ஒழுக்கம் மீறல் என்பனவற்றுக்கான தண்டனைகள் மத்தியகால மதவாத ஒழுக்கங்களை ஒத்ததும் தமிழ் தேசியவாதத்தின் தூய தமிழ் இனம் கற்புடைய பெண்கள் என்ற மூடநம்பிக்கைகளோடும் சம்பந்தப்பட்டதாகும். எனினும் இவைபோன்ற கருத்தமைப்புக்களை இவர்களே சொந்தமாய் மீறுபவர்களாகவும் இருக்கிறார்கள். புலிகளின் முகாம்களில் போர்னோ கசட்டுகள் கைப்பற்றபட்டமை, திருமணமான, திருமணமாகாத புலிகளின் ஆண், பெண் உறுப்பினர்களின் பாலியல் உறவுகளைப்பற்றி பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. புலிகளால் துரோகி, சமூக விரோதி என பிடிக்கப்பட்ட பல பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல ஆராயப்படாமல் இருக்கின்றன. மிக அண்மைக்காலத்தில் கருணா அணியைச் சேர்ந்த பல பெண்கள் பிடிபட்டபோது பாலியல் வன்முறைக்குக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட செய்திகள் இருக்கின்றன. பேச்சுவார்த்தைக்கென்று ‘தாய்லாந்து" போன புலிப் பிரமுகர்களின் கூத்துக்கள் பலவும் பத்திரிகைளிலும் அவர்களின் அரசியல் ஆலோசகரின் திருவாய் மலர்தலினாலும் வெளிவந்திருக்கிறது. பெண்கள் பாலியல் தூய்மை பேண வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் இவர்கள் முழு ஆணாதிக்கவாதிகளாகவும் தேசிய விசர் பிடித்தவர்களாவுமே இருக்கின்றனர்.

"தூய ஆரியப் பெண்ணின் யூத இனத்துடன் கலக்காத சுத்த இரத்தம் பற்றிப் பேசிய நாசிகள் அதே ஜேர்மானியப் பெண்களை வைத்தே தமக்கு இரகசியமாகப் போர்னோ படங்கள் தயாரித்தனர். ஒரு தொகை பாலியல் மற்றும் சம பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கிட்லரின் கட்டளைப்படி SS இன் தலைவராக இருந்த கைன்ரிச் கிம்லர் (Heirich Himmler)விஞ்ஞானியான பிரான்ஸ் ஸ்சேகர்ட் ((Franz Tschaker)டைக் கொண்டு பாலியலில் ஈடுபடத்தக்க செயற்கையான பெண் பொம்மைகளைத் தயாரித்தான். புலிகளிடமிருந்தும் இப்படி ஆணாதிக பாலியல் மீறல்கள் சார்ந்த பெருந்தொகைக் கதைகள் எதிர்காலத்தில் கட்டாயம் வெளிப்படும் என்று நாம் இப்போது எதிர்வுகூற முடியும். வன்னியில் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்காவையும் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் வெகுவாக ஆதரித்தார். அந்த அமெரிக்காதான் இன்று உலகிலேயே பெரும் பாலியல் தொழிற்றுறையைக் கொண்ட நாடாகும். அமெரிக்காவில் உள்ள San Fernendevally போர்னோ படம் தயாரிப்பு நிறுவனம் வருடாந்தம் 11,000 போர்னோ படங்களைத் தயாரிக்கிறது. ஹொலிவுட் நடிகைகள், பொப் பாடகிகள் மாதிரியில் பாலியல் பொம்மைகள், பெரிய தலைமயிர், பெரிய மார்பு, தடித்த உதடுகள், தட்டையான வயிறு உடையனவாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பாலியல் பொருட்கள் தயாரிப்புமூலமாக அமெரிக்காவின் உள்நாட்டு வருமானம் 10 மில்லியன் (10 ஆடைடழைn) டொலர்களாகும். இது விளையாட்டுத்துறை மற்றும் இசை, பாடல் துறை விற்பனையையும்விட அதிகம். உலகமயமாகும் போக்கில் இத்தகைய போக்குகள் தமிழ் ஈழத்தில் நுழைவதை புலிகளால் தடுக்கமுடியாது. கொழும்பில் ரஸ்யா, உக்ரேன், தாய்லாந்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விலைமாதர்கள் பெருகியுள்ளனர். கொழும்பில் மட்டும் இத்தயை 200க்கு மேற்பட்ட நிலையங்கள் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இவை உலயமயமாதலின் நேரடி விளைவாகும். ஒரு சோசலிசப் புரட்சி மட்டுமே பெண்ணையும் சமத்துவப்படுத்தும் பெண்ணை பாலியல் பண்டமாக்குவதை நிறுத்தும் கடமைகளைத் தொடக்கும்.

புலிகள் ஒழுக்கக் கேடு என்பதை பெண்ணின் உடலோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமாய்ப் பார்க்கின்றனர். புலிகள் செய்யும் பயங்கரவாதம், கொலை, சித்திரவதை, பிள்ளைகள் கடத்தல், பொய்ப்பிரச்சாரம் என்பன மனிதர்களின் ஒழுக்கக்கேட்டுடன் சாராத விடயமா? தாயின் முன்பு மகளை, மனைவி முன்பு கணவனை, குழந்தைகள் முன்பு தாய் தகப்பனைக் கொன்ற புலிகள் ஒழுக்கக் கேடானவர்கள் இல்லையா? சாவச்சேரியில் 8 மாதக் குழந்தை வதனனைக் கொன்ற புலிக் கொலையாளிகளை எந்த மனித ஒழுக்கவிதியில் சேர்த்து எண்ணுவது? யுத்தகாலத்தில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளிடம் புலிகள் பணம் வாங்கிக்கொண்டு மக்களைக் கொள்ளையிட அனுமதித்தார்களே அது ஒழுக்கமீறல் இல்லையா? ஆயுதமற்ற சிங்கள, முஸ்லிம் கிராமவாசிகளைக் கொல்வதும் கந்தன் கருணை முதல் பள்ளிவாசல் படுகொலைகள் வரை எந்த மனித ஒழுக்கத்தில் சேர்ப்பது? ஜேர்மனியில் ஒரு பெண்ணை விலைமாது என்று பகிரங்கமாகப் பழித்தாலோ "நீ ஒழுக்கமற்றவள்(Du Schlampe) என்று பேசினாளோ 1500 யூரோ அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கபடலாம். ஆளும் புலிப்பாசிசம் கேட்டுக் கேள்வியில்லாமல் லீலாவதியைச் சுட்டுக்கொன்று விட்டு அவளை நடத்தை கெட்டவள் என்று தமது ஊடகங்களில் எழுதுகிறார்கள். இரண்டாவது முறையாகவும் அவளைக் கொல்கிறார்கள். இலங்கையில் டட்லி சேனநாயக்கா, தர்மலிங்கம், வி. போன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் சமபாலியல் உறவாளர்களாக இருந்தார்கள். அதற்காக அவர்களை மக்கள் தள்ளிவில்லை; கௌரவம் தர மறுத்ததில்லை.

இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கிரிசாந்திக்கும் புவனேஸ்வரிக்கும் கவிதை எழுத, வாசிக்க, கொதித்தெழ பல பெண்ணியவாதிகள் இருந்தனர். சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறை செய்தால் மட்டும் தமிழ்ப் பெண்ணின் யோனி கிழிந்து இரத்தம் சிந்திய கதையெழுதப் பலர் முன்வந்தனர். ஆனால் அதே தமிழ்ப் பெண்ணை புலிப்பாசிசம் பாலியல் நீதிநெறிகளைத் தவறினாள் என்று கொலை செய்தாலோ அல்லது மட்டக்களப்பில் நிகழ்ந்ததுபோல் தாமே பாலியல்வன்முறை செய்து கொலை செய்தாலோ யாரும் பேச மாட்டார்கள். இவர்கட்காக இரத்தமும் கண்ணீரும் சிந்தும் கவிதைகள் எழுதப்பட மாட்டா. கண்டனங்கள் கிளம்ப மாட்டா. அந்த மட்டத்திற்கு பெண்ணியம் தமிழ்த் தேசியவாதப் பெண்ணியமாகி நிற்கிறது.

யேசு கிறிஸ்துவானவர் முழு மனிதகுலத்திற்குமாய் போராடி உயிர்நீத்தவர் எனச் சொல்லும் தமிழ்ப் பாதிரிகள் ஏன் தனியே தமிழர்களுக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்? மனிதப் பொதுவில் நீதிபேச ஏன் அஞ்சுகிறார்கள்? எந்த தமிழ் கிறிஸ்தவர் பாதிரியார் கூட்டமும் லீலாவதிக்காகப் பேச வரவில்லை. அன்னிய ஸ்திரியை மனதால் கூட நினையாதவர்கள் அவள்மேல் முதற்கல்லை விட்டெறியட்டும் என்று சொல்ல இந்த தமிழ்ப் பாதிரிகட்கு யேசுக் கிறிஸ்துவானவர் அருள் பாலிக்கவில்லை. கிறிஸ்துவின் மனைவி என்று கருதப்படும் மரியா மக்டலேனா (Maria Magdalena)ஒரு விலைமாது என்று அமெரிக்காவின் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுத்துறை பேராசிரியரான கார்லோ பெட்ரோட்டி (Carlo Pedretto) குறிப்பிடுகிறார். தமிழ் பாதிரிகள் தமது பிதாவின் திருக்குமாரனான யேசுவின் மனைவியின் பொருட்டாகிலும் லீலாவதிக்காகப் பேசியிருக்கவேண்டும். யுனிசெவ் நிறுவனத்தின் மதிப்பின்படி உலகில் இரண்டு மில்லியன் குழந்தைகள் விலைமாதராகத் தொழில் புரிகின்றனர். புலியின் நீதியின்படி இவர்கள் அனைவரையும் கொன்றொழிக்க முடியுமா? வீட்டில் வளர்த்த கிடாவைக் கூட பிள்ளை போல் ஊட்டி வளர்த்தது என்று தாமே வெட்டாதபோது, எமது சமூகம் பூனை, நாய், ஆடு, மாடுகளைக் கூட அடித்து உதைத்து வருத்தினால் வாய் பேசாத சீவன்களை வருத்தாதே என்ற எமது தாய்மாரின் குரல் ஒலித்த பூமியில் இப்போது புலிப்பாசிசம் பெண்களைக் கொன்று வீடுகளிலும் வீதிகளிலும் வீசுவதைப் பார்த்து அஞ்சி அடங்கி மௌனித்திருக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தவளைக் கொடுமைப்படுத்தாதே என்று சொல்ல ஒரு தமிழீழப் பிரஜைக்கும் துணிவில்லை.

உளவியல் பாதிப்புடைய பலர் தமிழ்ப் பகுதிகளில் கொல்லப்பட்டனர். யாழ் நகரில் தன் நெஞ்சில் தானே துப்பிக் கொண்டு திரியும் மார்க்கண்டு, அழுக்குக் காற்சட்டையுடன் நவீன சந்தைப்பக்கம் உலாவிய கோந்தை, அரபுமொழியில் புலம்பிக்கொண்டு திரிந்த முஸ்லிம் ஒருவர், நாய்குட்டி விசரி எனப்பட்ட பெண் உட்படப் பல உளநலப் பாதிப்புடையவர்கள் இக்காலகட்டத்தில் செத்தனர். கந்தையா என்ற மனநலம் சரியில்லாத ஒருவர் தெல்லிப்பழையில் தன் மூட்டை முடிச்சுக்களுடன் தெருவில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். பொதுவாகவே உளவியல் பாதிப்புடையவர்கள் நடித்து உளவு அறிபவர்களாகவும் பைத்தியம் போலப் பாசாங்கு செய்பவர்களாகவும் கருதப்பட்டனர். உளவில் பற்றிய தொடக்கநிலை அறிவு கூட இல்லாத எம் சமூகம் உளப்பாதிப்புற்றவர்களைப் பற்றி தவறான படிமங்களையே கொண்டிருந்தது. இவர்கள் நன்கு நடிப்பவர்கள் நாலு போட்டால் தெளிந்துவிடும் என்ற கருத்து இருந்தது. இவர்கள் சமுதாயத்துக்கு உபயோகமற்றவர்களாக, பாரமாக, சோத்துக்குத் தண்டமாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு எந்த மனிதப் பெறுமானமும் இருக்கவில்லை. மறுபுறம் அவர்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவர்களாக, எந்தச் சமயத்திலும் சமுதாயத்துக்கு அபாயமாக மாறக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டனர்.

உளவியல் பாதிப்புடையவர்களுக்கு பட்டம் வைப்பது, நையாண்டி செய்வது, உடல்ரீதியாக துன்புறுத்துவது என்பனவும் எம்மிடம் ஒரு சமுதாயப் பண்பாகவே இருந்தது. இவர்களுக்கு இரக்கம் காட்டப்படுவது இல்லை. உணவு உடை மருத்துவ உதவிகள் இன்றி தெருக்களில் அலைந்து மரணிக்கும்படி இவர்கள் விடப்பட்டனர். இவர்கள் உளவியல் மருத்துவ சிகிச்கைக்காக அனுப்பப்படுவது மிகவும் அரிதாகவே. தீவிரமான சிந்தனைப்போக்குடையவர்கள், வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள், கலைஞர்கள், சிறந்த சிந்தனையாளர்கள் போன்றவர்கள்கூட மண்டை கழண்டவர் மேல்மாடி பிழை லூஸ" தட்டிய கேஸ,; எனப்பட்டபோது சுயநினைவற்ற முழுமையாய்ப் பாதிக்கப்பட்டவர்களை எப்படி நடத்துவர் என்று சொல்லத்தேவையில்லை. அங்கொடை போன்ற இடங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்களைக் கூட அனுதாபம் காட்டாமல் உளவியல் சேதப்படும்படி அவர்களைக் கையாண்டு திரும்பவும் உளநலம் பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கிய சம்பவங்கள் ஏராளம். அத்தகைய சமூக உளநோய் கொண்ட சமூகத்தில் இருந்து வந்த தமிழ் ஆயுத இயக்கங்கள் எப்படி நடந்துகொள்ளும்?

"புத்திஜீவிகளின் இயக்கம்" என்பதாக நிரம்பவும் மெச்சப்பட்ட (தம்மைத்தாமே மெச்சிக்கொண்ட) இயக்கம் ஈரோஸ் அமைப்பாகும். மற்றவர்களைவிட தாமே அறிவு சார்ந்தவர்கள் என்று மிதந்து திரிந்தவர்கள் அவர்கள். சுய இன்பத்தில் திளைத்தவர்கள். இவர்கள் நசுக்கிடாமல் செய்த துரோகிகள், சமூக விரோதிகள் ஒழிப்பு தத்துவ உலகில் உயர் வரிசைக்குரியதாகும். தமக்கு எதிராக அகதிகளுக்கான குடியேற்றங்களை ஏற்படுத்தினார் என்பதற்காக லண்டனைச் சேர்ந்த கந்தசாமியைக் கொன்று இரகசியமாக யாழ்ப்பாணத்தில் கழிவு வாய்க்காலுக்குள் வீசினார்கள். சர்வோதய அமைப்பைச் சேர்ந்த கதிரமலையை அரச உளவாளி என்று அவர்கள் கொலை செய்த முறை தமிழ் இயக்கங்களின் கொடூரமான மனவிகாரங்களுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் பூசிமழுப்பும் குணத்திற்கும் சரியான எடுத்துக்காட்டாகும். கதிரமலையைக் கொல்வதற்காகப் பிடித்து காரில் யாழ் நிலையத்தை நோக்கி கொண்டு சென்றபோது அவரின் கண் முன்பாக மற்றொரு காரில் அவருக்கான சவப்பெட்டி முன்னே கொண்டு செல்லப்பட்டது. பின்பு அவர் பஸ் நிலையத்தில் வைத்து சகலரும் பார்க்த்தக்கதாக கொல்லப்பட்டார். ஆனால் கந்தசாமியின் கொலையை ஈரோஸ் கடைசி மட்டும் உரிமை கோராமல் மறைத்தது. இது சம்பந்தமாக அந்தச் சமயத்தில் தம் வெளிநாட்டுத் தோழர் ஒருவருடன் பேசிய பாலகுமார் தாமே இக்கொலையைச் செய்ததாய் ஒப்புக்கொண்டதுடன் "இதை தனிப்பட்டமுறையில் உங்களுக்குச் சொல்கிறேன் பகிரங்கமாக மக்கள்மத்தியில் ஒப்புக்கொள்ள மாட்டோம்" என்றார்.

இன்னொருமுறை ஜெர்மனியில் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் புலிகளால் தாக்கப்பட்டார். இது சம்பந்தமாக ஜேர்மனியில் உள்ள ஈரோஸைச் சேர்ந்த ஒருவர் அப்போது தமிழ் நாட்டில் இருந்த பாலகுமாரிடம் தொடர்புகொண்டு முறையிட்டார். இது சம்பந்தமாக பிரபாகரனிடம் பேசுவதாய் சொன்ன பாலகுமார் பின்பு ஜேர்மனியில் இருந்து ஈரோஸ்காரர்கள் தொடர்புகொண்டபோது பின்வருமாறு தொலைபேசியில் சொன்னார். "நான் பிரபாகரனுடன் பேசினேன். அவன் இங்கே ஹிட்லர் மாதிரி நிக்கிறான். என்னைப் பயங்கரவாதி என்று சொல்லிவிட்டு ஜேர்மனியில் அவர்கள் இருந்துவிடுவாங்களா? நானே போய்ச் சுட்டுவிட்டு வருவேன் என்கிறான். அங்கு உங்களைப் புலிகள் அடித்தால் திருப்பியடித்துவிட்டு எனக்குச் சொல்லுங்கள்". இதுதான் ஜேர்மனிய ஈரோஸ் தோழர்களுக்கு பாலகுமார் செய்த தத்துவ உபதேசமாகும்.


பிழையே விட்டறியா, தவறு என்றால் என்ன, ஏது என்றறியா விடுதலைத் தியாகிகளான தமிழ் ஆயுத இயக்கங்கள் 1980களில் தீவிரமான துரோகி அழிப்பு, ஒழிப்புடன் சமூக விரோதிகளையும் கொன்று தமிழ்த் தேசத்தை சுத்தப்படுத்தும் கதாநாயகக் கடமைகளையும் ஆரம்பித்திருந்தார்கள். வர்க்க சமூகப் பிளவுகளால், பொருளியல் சார்ந்த துயரங்களால், சமூகத்தின் பொதுஒழுங்கை மறுதலிக்கும் நடத்தைகளையுடைய மனிதர்கள் தோன்றுகின்றனர். சமூகத்தின் பொதுவிருப்புகளுக்கு எதிராக கலகம் செய்கின்றனர். அரசியலைத் தேடிக்கொள்ளும் முன்பு ஆயுதத்தை தேடிக்கொண்ட இந்த ஆயுததாரிகள் உண்மையில் சமூக ஞானமோ, அரசியல் வலிமையோ இல்லாத வெறும் ஆயுத சாகசவாதிகளாக மட்டுமே இருந்தனர். கப்பம் வாங்குவோர்கள், சண்டியர்கள், திருடர்கள் விலைமாதர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள், நாடோடிகள், தனியே வாழ்ந்த சிங்களவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர். சாதாரண நீதி விசாரணை சார்ந்த அறிவோ மனித நெறிமுறைகளோடு பழக்கமோ இல்லாத தனிமனித முடிவுகளுக்கும் எழுந்தமானத்திற்கும் சமூகப் பாதுகாப்பற்றவர்களைக் கொலைசெய்தனர். ஆனால் இந்த இயக்கவீரர்கள் - விடுதலையின் பிரபுக்கள் தாமே தமக்குள் சமூக உதிரிகளையும் பெருமளவு கொண்டிருந்தனர். ஒரே கோப்பையில் சாப்பிட்டுவிட்டு ஒரே பாயில் படுத்துறங்கிய நண்பனையே கொன்ற பாரம்பரியங்களைக் கொண்டிருந்தனர்.


இத்தகைய விடுதலைப் பண்புகளை உடையவர்கள் தமிழீழத்தை சுத்தம் செய்யத் திட சங்கற்பம் பூண்டனர். ஆரம்பத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பெருமளவு சண்டியர்கள் சுடப்பட்டனர். யாழ் கொட்டடியில் துரையப்பாவின் ஆதரவாளரும் மாநகர சபை உறுப்பினருமான தெய்வேந்திரம் உட்பட பெரும் சண்டியர்கள் இருந்தனர். இங்கு "போயா" என்ற சண்டியர் உட்பட நான்குக்கு மேற்பட்டவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். யாழ் கந்தர்மடத்தில் குரு, ஓட்டுமடத்தில் சந்திரன் என பலருக்கு மரண தண்டனை தரப்பட்டது. யாழ் ஆஸ்பத்திரியடியில் "தோடம்பழச் சண்டியர்கள்", ஸ்டான்லி வீதியில் "வயல்வெளி விஜயன்", ஆரியகுளத்தடியில் பொன்ராசு உட்பட ஆரியகுளச் சண்டியர் என்று பலவிதமான சண்டியர் குழுக்கள் இருந்தன. இதில் பொன்ராசா, தெய்வேந்திரம் போன்ற அரசியல் பணச் செல்வாக்குடையவர்கள் தவிர ஏனைய சண்டியர்கள் பெரும்பகுதியாய் சுடப்பட்டனர். சுன்னாகத்தில் மலைப்பை செல்வராசா, மல்லாகத்தில் சுந்தரம், பருத்தித்துறையில் வீரபாகு, வல்வெட்டித்துறையில் வீரபாகு, கீரிமலையில் வியாளி என்ற சண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த செல்வராசா என்று அக்காலகட்டம் முழுவதும் சண்டியர் ஒழிப்பு தீவிரமாக நடந்தது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் சண்டியர்கள் சமூக விரோதிகள் ஒழிப்பில் கொல்லப்பட்டவர்கள் பலர் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவின், பொருளாதார உரிமையற்ற மனிதப் பிரிவினராக இருந்தனர்.

உதாரணமாக யாழ்ப்பாண நகர் சாதிரீதியாக பிளக்கப்பட்டு இருந்தது. நல்லூர், சுண்டிக்குழி, கச்சேரியடி என்பன பொதுவாக வேளார்கள், கல்விகற்றவர்கள், செல்வந்தர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. நடுத்தர வர்க்கம் சார்ந்த வியாபாரிகள், அரச சேவையாளர்கள் இங்கு பெருமளவு வாழ்ந்தனர். இப்பிரதேசங்கள் கௌரவமான மனிதர்கள் வாழும் பிரதேசங்களாகக் கருதப்பட்டன. மாறாக கரையூர், பாசையூர், ஆரியகுளத்தடி, அரியாலை, அஞ்சனம்தாழ், மறவர்குளம், புல்லுக்குளம், கொட்டடி என்பன பொருளாதாரரீதியாகப் பலமற்ற, ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த மக்கள் வாழ்ந்த பிரதேசங்களாக இருந்தன. கரையூர், பாசையூர் என்பன மீன்பிடி மக்களைக் கொண்ட பிரதேசங்களாகவும் ஓரளவு பொருளாதார பலமுடையனவாகவும் இருந்தன. யாழ்நகரின் புகழ்பெற்ற வைத்தியர்களான பிலிப்ஸ், ஏப்ரகாம் என்போர் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் மற்றைய சாதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான வாழ்நிலையைக் கொண்டிருந்தனர். ஆரியர்குளம், மறவர்குளம் புல்லுக்குளம், வண்ணார்குளம் போன்ற யாழ்நகரின் கழிவுநீர்கள் தேங்கும் அசுத்தமாக பகுதிகளில் இவர்களில் ஒருபகுதி வாழ்ந்தனர். இவர்கட்கு நிரந்தரமான தொழிலோ வருமானமோ தமது சாதிசார்ந்த தொழில்களைக்கூடப் புரியும் சாத்தியமோ யாழ் நகர்ப்பகுதியில் அருகிக் காணப்பட்டது. இவர்கள் சீவல் தொழிலாளர்களாகவும், கள்ளச்சாராய விற்பனை, மரக்காலைகளில் தூக்குவிறகு வெட்டுவது, கட்டிடவேலைகள், கராச் வேலை, இரும்புப் பட்டறை வேலை போன்ற நிரந்தர வருமானமற்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். யாழ் ஆஸ்பத்திரி முன்பு தோடம்பழம், மாம்பழம், தேங்காய் விற்பனை போன்ற தெருவோர வியாபாரத்திலும் இவர்களில் சிறு பகுதியினர் ஈடுபட்டிருந்தனர். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் கூலி வேலை உட்பட வீடுகளில் மா, தூள் இடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.


இம்மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் பெரிய வீடுகளோ தொழில் நிலையங்களோ கல்விக்கூடங்களோ இருக்கவில்லை. யாழ்நகரில் உள்ள நகைக்கடைகள், புடவைக்கடைகள், சாப்பாட்டுக்கடைகள், சினிமாத் தியேட்டர்கள், மொத்த விற்பனை நிலையங்கள், டியூட்டரிகள், மது விற்பனை நிலையங்கள், டிஸ்பென்சரிகள் எதுவும் இவர்கட்கு சொந்தமாக இருக்கவில்லை. விதிவிலக்காக யாழ் ஆஸ்பத்திரி முன்பு இருந்த சவப்பெட்டிக் கடைகள் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவைச் சோந்தவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. உண்மையில் வேளாளர்களில் இது பிணம் தூக்கும் வேலை என்று கழித்துவிடப்பட்ட தொழிலாக இருந்தது. சமூகம், பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் வாய்ப்பற்ற ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் பண்பாட்டு அடிப்படையிலும் முன்னேற முடியாதவர்களாக சமூகத்தின் காலில் மிதிபடும்படி விடப்பட்டனர். இதனால் உயர்சாதிகளும் செல்வந்தப்பிரிவினரும் இவர்களை இலகுவாய்ப் பயன்படுத்தினர். யாழ் பெருவர்த்தகர்கள் பெரிய பார், உணவுவிடுதிகள், சினிமாத் தியேட்டர்கள் வைத்திருப்போர் இம்மக்களை அடியாட்களாகப் பயன்படுத்திக் கொண்டனர். ராணி வெலிங்டன் தியேட்டர்களில் புதிய சினிமாப் படங்கள் திரையிடப்படும்போது சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த அடியுதை போட்டு அடக்க இந்த அடியாட்கள் பயன்படுத்தப்பட்டனர். இதற்கென இத்தியேட்டர் மனேஜர்மார்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சண்டியர்கள் உதிரிகளைத் தொடர்ச்சியாய்ப் பயன்படுத்தினர். இவர்கட்கு பெரும்பகுதியாய் சராயம் உணவு என்பனவே சம்பளமாய்த் தரப்பட்டத


வின்சர், ராஜா போன்ற சினிமாத் தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடப்படும்போது உயர்சாதிகளைச் சேர்ந்த சண்டியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவை டீசன்டான சினிமாத் தியேட்டர்களாகக் கருதப்பட்டபோது ராணி, வெலிங்டன் என்பன ஊத்தைவாளித் தியேட்டர்களாகக் கருதப்பட்டன. ராணித் தியேட்டர் பகுதியில் சண்டித்தனம் மற்றும் கள்ள ரிக்கற் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊத்தைவாளி மணியம் உட்பட பலர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஊத்தைவாளிகள், சினியன், தோடம்பழக்கூட்டம் என்பன ஒடுக்கப்பட்ட சாதி மக்களைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டன. இம்மக்கள் வாழ்ந்த இடங்கள் நல்லசாதிகள் கௌரவமான மனிதர்கள் வாழும் இடமாகக் கருதப்படாததுடன் இப்பகுதிகளுக்கு முக்கியமான காரியங்களைத் தவிர செல்வதையும் தவிர்த்தனர். யாழ்ப்பாணத்தின் உயர்சாதியினர், வர்த்தகர்கள் தமிழரசு தமிழ்க் காங்கிரசுக்கு ஆதரவும் நிதியும் தருவோராக இருந்தனர். ஆனால் சமசமாஜக் கட்சி விசுவநாதன் உட்பட இடதுசாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரித்தனர். பிற்காலத்தில் இவர்களில் ஒருபிரிவு துரையப்பாவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் ஆரியகுளம் பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சோந்த சண்டியராகவும் ஓரளவு செல்வம்மிக்கவராகவும் இருந்த பொன்ராசா தம் சாதிமக்களுக்கு எதிராக மேல்சாதி உயர்வர்க்கங்களுடன் இணைந்து செயற்பட்ட சம்பவங்கள் ஏராளம். உதாரணமாக காரைநகர்ப்பகுதியைச் சோந்த கோவில் ஐயரின் மகள் ஒரு ஒடுக்கப்பட்ட சாதி இளைஞருடன் காதல்செய்து ஓடிவிட்டாள். அப்போது பொன்ராசா கோவில் ஐயரிடம் காசை வாங்கிக்கொண்டு அப்பெண்ணும் இளைஞனும் நீதிமன்றத்திலிருந்து திரும்பிவரும்போது தன் ஆட்களைக் கொண்டு அப்பெண்ணைக் கடத்தி ஐயரிடம் ஒப்படைத்தார். இங்கு தமது சாதி சனம் என்பதைவிட வர்க்க ஒத்துழைப்பு பலமாய் இருந்ததைக் காணமுடியும்.



சோடாமூடி


சோடாமூடி, சரக்கு, அடிசரக்கு போன்ற சொற்பிரயோகங்கள் யாழ்ப்பாணப்பகுதியில் விலைமாதரைக் குறிக்க முன்பு பயன்படுத்தப்பட்டவையாகும். எனினும் இதில் சரக்கு என்பதற்கு பெட்டை, காதலி, பெண் என்ற அர்த்தம் பிற்காலத்தில் கொள்ளப்பட்டது. சோடாமூடி என்பது பாலியல் தொழில்புரிவோரை சுட்ட பொதுவாய்ப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சோடாமூடி என்ற பெயர் உருவாகக் காரணமான இருந்தவர் 1960கள் முதல் 1980வரையில் யாழ்நகர்ப்பகுதி பஸ் நிலையம், ஆஸ்பத்திரியடி, முழுவச்சந்தி ஆகிய பகுதிகளில் நடமாடிய ஒரு விலைமாதாவார். அக்கால யாழ்நகரை அறிந்தவர்கள் சோடாமூடியையும் சேர்ந்தே அறிவார்கள். யாழ்ப்பாண நகரின் அயற்கிராமத்தவர்கள் கூட சோடாமூடி என்றால் யார் என்ன ஏது என்று அறிந்திருந்தனர். தன்னை விற்கும் தொழிலில் ஈடுபட்ட இப்பெண்ணுடன் தொடக்ககாலத்தில் பாலியல் உறவுக்குப்போன ஒருவன் காசுக்குப் பதிலாக சோடாமூடியைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான். இது எங்கும் பரவி இவளுக்கு பெயரே சோடாமூடி என்றாகியது. அவளை ஏமாற்றியவனுக்கு பணத்திற்குப் பதிலாக சோடாமூடியைக் கொடுத்து ஏய்த்தவனுக்கு இடப்பட்டிருக்கவேண்டிய பெயர் மோசடிக்குள்ளான இவளுக்கான பெயராக இடப்பட்டுவிட்டது. சோடாமூடி என்பது பாவித்துவிட்டு (புணர்ந்துவிட்டு) தூரவீசியெறியும் பொருள் என்ற கருத்தில் விலைமாதருக்கான பொதுப்பெயராக ஆகிவிட்டது. ஒழுக்கம் தவறும் பெண்களை மரியாதை கெடுத்தி மகிழும் உளவியல்கொண்ட மனரீதியாக ஒழுக்கம்கெட்ட சமூகத்தின் தெரிவாகியது.


மற்றைய அன்னையரைப் போலவே சோடாமூடியின் தாயும் அவளுக்கு ஒரு பெயரை இட்டிருப்பாள். தனக்குப் பிடித்த ஒரு நாமத்தைச் சூட்டி மகிழ்ந்திருப்பாள். ஏனைய தாய்மாரைப் போல குட்டி குஞ்சு கிளி ராசாத்தி கற்கண்டு என்று கொஞ்சியிருப்பாள் ஆனால் அவையெதுவுமே நின்று நிலைக்காமல் சோடாமூடி என்ற இடுகுறிப்பெயரே அவளுக்காகியது. ஒழுக்கக்கேடு அழுக்கு இழிவு வெறுப்பு இவைகளி;ன் திரட்டாய் சோடாமூடி என்ற பெயர் ஆகியது. சோடாமூடி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று எமது விசாரிப்புகள் காட்டுகின்றன. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவு மக்களுடன்தான் அவளது தொழிலும் வாழ்வும் சகவாசமும் அமைந்திருந்தது. ஆஸ்பத்திரி முன்பு தோடம்பழம் மாம்பழம் விற்பவர்கள், பழைய சந்தையில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், டாக்சிச் சாரதிகள், முழுவச் சந்தியில் மாடுவெட்டும் தொழில்புரிபவர்கள், முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள்; மத்தியிலே இவள் காணப்பட்டாள். யாழ்நகரின் கல்வி வாழ்க்கைத் தரம் இவைகளில் பின்தங்கிய, தொழிலின்மையும் வறுமையும் குற்றச் செயல்களும் நிறைந்த இப்பகுதிகளில்தான் சோடாமூடி உயிர்த்திருந்தாள். சோடாமூடி ஆண்களைப் போல் இடுப்பில் கையூன்றி நிமிர்ந்து நிற்பாள். தமிழ்ச்சாதி பெருமைகொண்டாடும் உயர்குலப் பெண்ணின் பக்குவங்களான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற இலக்கிய இழிவுகள் அவளிடம் கிடையாது.

அழுக்கான வெள்ளைச்சேலை, கை கால் காது கழுத்து மூக்குகளில் எந்த ஒரு நகைநட்டும் பொன்னும் பொருளும் கிடையாது. காது துவாரம் தூர்ந்து போகாமலிருக்க மெல்லியதாய் பேப்பரைச் சுருட்டி சொருகியிருப்பாள். சோடாமூடி ஆண்கள் பேசக் கூசும் தூசணம் பேசுவாள். வாய் கொடுப்பவர்கள், நையாண்டி பண்ணுபவர்களை தூசணத்தில் கிழித்து நரகலாக்கி அனுப்புவாள். நன்றாக வெத்திலை போடுவாள். தண்ணியடிப்பாள். சமூகம் ஒழுக்கம் நிறைந்தது உயர்வானது என்ற மாயையை அவள் அவமானப்படுத்தினாள். எச்சிலாய்த் துப்பினாள். அவளை விலைமாதாக்கி உயிர்தப்பும்படி விட்டுவிட்ட சமூக அமைப்பின் பொய் ஒழுக்கங்களை மீறிக் காட்டினாள். சோடாமூடி ஐந்து பத்து ரூபாய்களுக்கு போகிறவளாய் அதனூடு சாப்பிட்டுக் குடித்து உயிர்தரிப்பவளாய் இருந்தாள். சனங்கள் அவளைக் கண்டு தூரப் போனார்கள். பெண்கள் அவளைக் காண்பதை பாவமாய்க் கருதினார்கள். வேலையற்றவர்கள், சமூக உதிரிகள், மாணவர்கள், வம்பளக்க விரும்புபவர்கள் சோடாமூடியை இடைவிடாமல் உளவியல்ரீதியில் வதை செய்து வந்தார்கள். வம்பளக்க விரும்புவர்கள் அவளைக் கடந்து தமக்குப் பாதுகாப்பானது என்று கருதும் தூரம் போனவுடன் சோடாமூடி என்று கத்துவார்கள். சத்தமிட்டு விட்டு சைக்கிள் பெடலை பலமாக மிதிப்பார்கள். இரவு நைட்சோ படம் பார்த்;துவிட்டு வருபவர்கள் அவளைப் புண்படுத்தி வேடிக்கை பார்க்க முயல்வார்கள். அச்சமயங்களில் சோடாமூடி "கொம்மாவைக் கொண்டுவந்து படுங்கோடா கொக்காவைக் கொண்டுவந்து விடுங்கோடா" என்று கத்துவாள். சீலையைத் தூக்கிக்காட்டி வந்து செய்துவிட்டுப் போங்கோடா என்பாள். அவள் பலருக்கு ஒரு வேடிக்கைப் பொருள். தம் மன அரிப்புகளையும் சொந்தப் பாலியல் உபாதைகளையும் பரீட்சிக்கும் உயிருள்ள மனிதக் கழிவுப்பொருள். அவளுக்கு எவரும் மனிதப் பெறுமானத்தை வழங்குவதில்லை. அவள் வயிற்றுக்கும் உயிர்வாழ்தலுக்கும் போராடும் உயிரியாய்க் கொள்ளப்படுவதில்லை. மனித உரிமை, ஜனநாயகம் இவைகளோடு பழகாத யாழ்ப்பாணச் சமூகம் விவசாயச் சமூக உறவுகளின் நம்பிக்கைகளில் குறுகி வாழ்விழந்து கிடந்த சமூகமாகும்.

ஜெயகாந்தன் தன் சிறுகதைகள் நாவல்களில் விலைமாதர்களைப்பற்றி எழுதி எழுத்துக்கலகம் செய்யமுன்பே யாழ்ப்பாணத்தின் தெருக்களில் எதிர்காலத்துக்கான கதைகளை எழுதிச் சென்றவள் சோடாமூடி. பாலியல் ஒடுக்குமுறை நிறைந்த முன்னேற்றமடையாத ஆணாதிக்க சமூகமான தமிழ் மக்கள் மத்தியில் சோடாமூடிகள் படைக்கப்படுவது தவிர்க்கமுடியாத விடயமாகும். இரகசியாக வைப்பாட்டிகள் வைத்துக் கொண்வதற்கு வெட்கப்படாத யாழ்ப்பாண உயர்சாதிச் சமூகம் சோடாமூடிகளை ஆண் ஆதிக்க சமூகத்தின் படைப்பாக விளங்கிக்கொள்வதில்லை. சோடாமூடி தமிழ் ஆயுதக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்படும்போது வயது போய் பற்கள் முழுவதும் கொட்டி உடல் உளரீதியில் தளர்ந்துபோய் காணப்பட்டாள். அவளை யாரும் தேடுவதில்லை. அவளும் யாரையும் தேடுவதில்லை. ஆஸ்பத்திரிமுன்பு கடலை வியாபாரம் செய்து வாழ்ந்தாள். இரவில் றோயல் டிஸ்பென்சரி முன்பு படுப்பாள். கடைசிக்காலத்தில் முதுமை சூழ்ந்து நோயுற்று மனிதர்களால் கைவிடப்பட்டு தனித்திருந்த சேடாமூடியை ஒரு இனம் காட்டப்படாத பொழுதில் தூய தமிழ் கற்பை ரட்சிக்கப் பிறந்த தமிழ் ஆயுதவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

வைரமாளிகை

வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.

தன்னை வியப்புடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகட்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக் காட்டுவார். மேஜிக் காட்டி பொக்கற்றிலிருந்து இனிப்பு வரவழைத்து தருவார். நகருக்குப் புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை விளக்க நேரம் எடுத்துக் கொள்வார். முதியவர்கள், அங்கவீனர்கள், பெண்களுக்கு உதவி செய்வார். தெருக்களைக் கடக்க உதவுவார். வழிகாட்டுவார். யாழ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் செல்லும் நேரம் இடம் திசை, எந்தெந்தக் கிராமம் தெருக்கள் ஊடாகச் செல்கிறது என்பதெல்லாம் விளக்கிச் சொல்வார். "பருத்தித்துறை 750 இலக்க பஸ் வெளிக்கிடுகிறது. 577 இலக்க தெல்லிப்பழை பஸ் வெளிக்கிடுகிறது ஏறுகிறவர்கள் எல்லாம் ஏறுங்கள்" என்ற அவரின் குரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். யாழ் பஸ்நிலையத்தில் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் மக்களுக்கு வைரமாளிகை சிறந்த பொழுதுபோக்கு. எல்லோரும் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வைரமாளிகை நகைக்கடை விளம்பரத்துடன் சுவிப் டிக்கற் விற்பார். சிலசமயம் பத்திரிகைகள் சஞ்சிகைகள் கொண்டு திரிவார். பத்திரிகைகளில் வரும் செய்திகளை உரக்கச் சத்தமிட்டு சொல்வார். அந்தக் காலத்தில் கோகிலாம்பாள் வழக்கு நடைபெற்ற சமயம் அமிர்தலிங்கம் கோகிலாம்பாளுக்காக வாதாடியபோதும் அவளுக்குத் தண்டனை கிடைத்தது. அப்போது தீப்பொறி பத்திரிகை அமிர்தலிங்கத்தை கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம் என்று எழுதியது. ஆங்கில மோகமும் மிதப்பும் கொண்ட ஜீ ஜீ பொன்னம்பலத்தை சீ சீ பொன்னம்பலம் என்று எழுதியது. இச்செய்திகளை வைரமாளிகை சத்தம் போட்டுச் சொல்வார். வைரமாளிகைக்குப் பின்னால் திரிந்தால் பேப்பர் வாசிக்கத் தேவையில்லை என்று பகிடியாய்ச் சொல்லப்படுவதுண்டு.

அக்காலத்தில் தொலைக்காட்சிகள்; வராத காலம். ஒரு பேப்பரை வாங்கிப் பலர் படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கிய காலம். அக்காலத்தில் வைரமாளிகை ஊர் உலக நடப்புகளையும் தன் சொந்தக்கதைகளையும் ஒன்றுசேரப் பேசும் மனிதராக மக்கள் தொடர்பாளராக இருந்தார். அவர் ஒரு விளம்பரம் செய்யும் ஆளாக பேப்பர் சுவிப் டிக்கற் விற்கும் ஒரு அலைந்து திரியும் வியாபாரியாக இருந்தார் என்பதையும் மீறி அவருள் மனிதர்களிடம் பேசும் உரையாடும் மக்களை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார, விளம்பர விடயங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விடயங்களைப் பேசுவார். வேடிக்கை, சிரிப்பு, முரட்டுத்தனம் இடையறாப் பேச்சுக் கொண்ட உணர்வுபூர்வமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. பினாட்டு, கூழ், சிவப்புக் குத்தரிசியின் பெருமை பேசி முருங்கைக்காய் கறியோடு தன் தாயிடம் சோறு தின்ற கதை, சனிக்கிழமை உடம்புக்கு எண்ணை தேய்த்து சீயக்காய் அரப்பு வைத்து குளிக்கும் அவசியம் என்பதெல்லாம் யாரும் கேளாமலே அவரின் விபரிப்புகளில் இடம் பிடிக்கும். நல்லூர் கொடியேறி விட்டது சன்னிதியானின் திருவிழா பாசையூர் அந்தோனியார் திருவிழா சென் பற்றிக்ஸ் பெரிய கோயில் கொண்டாட்டம் எல்லாம் அவரிடம் செய்தியாக மக்களுக்கு வரும்.

அவரின் சொந்த இடம் மானிப்பாய். குடும்பம் எதுவும் கிடையாது. கொஞ்சக்காலம் மறியலிலும் இருந்தவர் என்று சனங்கள் அவரைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அவருக்கு வைர மாளிகை நகைக்கடையிலிருந்து விளம்பரம் செய்வதற்கு கூலியாக மாதம் 60 ரூபாவும் புதுவருடம் தீபாவளி விசேடங்களுக்கு கொஞ்சக் காசும் கிடைத்து வந்தது. அவர் பகல் பொழுதில் கிடைத்ததைச் சாப்பிட்டு பழைய மாக்கற்றுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தானே வாங்கி வைத்திருக்கும் தேயிலை, பால்ரின்னைக் கொண்டு பால் தேத்தண்ணி போட்டுக் குடிப்பார். இரவு படுக்க வைரமாளிகை நகைக்கடைக்குப் போவார். 1980களில் யாழ்ப்பாணம் மாறத் தொடங்கிவிட்டது. பலர் வெளிநாட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் விளம்பர சேவைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. வைரமாளிகையின் தொடர்ச்சியாக யாழ் பஸ்நிலையத்தில் மணிக்குரல் விளம்பரச் சேவை தொடங்கிவிட்டது. போர் வந்தபோது வைரமாளிகையினால் பழைய தன் வாழ்வைத் தொடர முடியவில்லை. சுவிப் டிக்கற் பத்திரிகை விற்பனைகள் இல்லை. நகை வாங்குவோர் குறைந்ததுடன் புலிகள் வைரமாளிகை நகைக்கடை பொறுப்பாளர் முருகமூர்த்தியிடம் 50 இலட்சம் ரூபா காசும் வெருட்டி வாங்கிவிட்டார்கள். எனவே வைரமாளிகைக்கு நகைக்கடையான வைரமாளிகையின் ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987ம் ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருட்களை விலைக்கு சிறிய அளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டைத் தீர்த்துக் கொள்ள முயன்றார்.

இதனால் புலிகள் அவரை யாழ் ஆரியகுளச் சந்தியில் பொருட்கள் விற்பனை செய்துகொண்டு இருந்தசமயம் பிடித்து சுட்டுக் கொன்றனர். இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தன்னிடமிருந்த மாட்டை இந்தியன் ஆமிக்கு கொடுத்துவிட்டு நன்கு பால் கறக்கக்கூடிய ஒரு விடக்கன் மாட்டை வாங்கிய குற்றத்திற்காக புலிகள் அவ் விவசாயியைச் சுட்டிருந்தனர். அதேசமயம் புலிகள் இந்தியாவிடமிருந்து தாம் மாதாமாதம் 5 மில்லியன் ரூபா பணத்தை பெற்று வந்தனர். வைரமாளிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படையான மனிதன். அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை. மனிதர்களுடன் உறவாடி வாழ்ந்த மனிதன். வைரமாளிகைளை ஒரு மனிதப் பெறுமானம் அறியாத ஒரு புலிக் கொலைஞன் சுட்டான். வைரமாளிகை யாழ் பிரதேச மக்களின் விகடகவி. அவர்களின் தெனாலி ராமன். யாழ் பிரதேச மக்களின் நினைவுகளோடு கலந்தவன். யாழ்ப்பாண நகரின் உயிருள்ள பொது அடையாளங்களில் ஒருவன். யாழ் பஸ் நிலையமும் நூல் நிலையமும் திரும்பி விட்டன. ஆனால் வைரமாளிகையையோ உடைத்தெறியப்பட்ட யாழ்ப்பாண கோட்டையைப் போல என்றும் திரும்பாதவன்.

எட்வினைச் சாக்காட்டிய கதை

வன்னிப்பகுதியில் பரவலாக சிறிய தொகையிலான சிங்களமக்கள் வாழ்ந்து வந்தனர். இதைவிட மீன்பிடி, மரம் வெட்டுதல், செங்கல் அரிதல், வியாபாரம், பேக்கரித் தொழில் என்பவற்றுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் உட்பட அரச சேவைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிலான சிங்கள மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதைவிட தேங்காய், இங்கிலிஸ் மரக்கறி, பழவகை, வெற்றிலை பாக்கு வியாபாரிகளும் வாரம் ஒருமுறை சந்தைகள், கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வருவார்கள். யாழ்ப்பாணப் பகுதியைவிட வன்னிப்பகுதி மக்களுக்கு சிங்கள மக்களோடு பெருமளவு தொடர்பும் சேர்ந்து வாழும் பண்பும் இருந்தது. வன்னிப்பகுதியில் அனுராதபுரத்திற்கு அடுத்து இலங்கையில் அதிகளவு குளங்கள் இருந்தன. எனவே இப்பகுதியில் குளங்களைத் திருத்தவும் சீரமைக்கவும் பணிபுரிந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சிங்களத் தொழிலாளர்கள் உத்தியோகத்தர்களுக்கு வன்னியின் கிராமப்புற மக்களோடு பகையற்ற உறவுகள் தொடர்புகள் நிலவின. 1958இல் இனக்கலவரம் நடைபெற்றபோது மாங்குளத்தில் பேக்கரி வைத்திருந்த பாணி சில்வா என்ற சிங்களவர் தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். அவரின் பேக்கரியில் இருந்த பொருட்களை லொறியை விட்டு ஏற்றிவிட்டு பேக்கரிக்கு நெருப்பு வைத்தவர் அப்போது மாங்குளத்தில் விதானையாக இருந்த சாவகச்சேரியைச் சேர்ந்த விசாகப் பெருமாளாகும். கலவரம் அடங்கிய பின்பு பாணிசில்வா திரும்பி வந்தார். அவருக்கும் ஊர்;ச்சனத்திற்கும் பாணி சில்வாவின் கடையை யார் கொள்ளையிட்டது என்று தெரியும். பாணி சில்வா கடையைத் திருத்தி மறுபடி திறந்தார். அத்தோடு துணுக்காய் ஒட்டன்குளத்தில் நெற்செய்கையிலும் ஈடுபட்டு வந்தார். 1979இல் இவர் வவுனிக்குளம் குடியேற்றத்திட்டத்தில் வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவர்களால் அவரது வயற்காவல்பெட்டியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பாணி சில்வா சிங்களவராய்க் கருதப்பட்டபோதும் அவர் பறங்கியக் கலப்பு இனத்தவராகும். அதை என்பதை நிரூபிக்க அவரது சாம்பல் நிறக்கண்களும் சில்வா என்ற போர்த்துக்கேய பெயரும் போதுமானதாகும். அவர் மாங்குளம் கிராமம் முதல் அதன் அண்டைய கிராமங்களிலும் அறியப்பட்டவராகவும் மக்களிடம் மதிப்புப் பெற்றவராகவும் இருந்தார். ஊரின் கல்யாண வீடுகள் செத்த வீடுகள் சகலதிலும் அவர் காணப்படுவார். கோயில் திருவிழாவுக்கு காசு கொடுப்பார். அவர் மாங்குளம் கிராமத்தின் பழைய ஆட்களில் ஒருவர். பாணி சில்வா ஒட்டங்குளத்தில் கொலை செய்யப்பட்டபோது மாங்குளம் கிராமம் மட்டுமல்ல அதன் அயற்கிராமங்களிலும் வாழ்நத வன்னிச்சனங்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். ‘போயும் போயும் இந்த மனிசனைக் கொண்டாங்களே’ என்று வருத்தப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்த நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்கள மீனவர்களும் வவுனிக்குளம் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்தவர்களால் குளத்துள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். இங்கு அவதானிக்கத்தக்கது என்னவெனில் சிங்கள மக்களுடன் வாழ்ந்து பழக்கப்படாதவர்களும் தமிழரசுக் கட்சியிடம் அரசியல் பாடம் கேட்டவர்களுமான யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகலேயே இச்சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர்.

மாங்குளத்தில் பாம்பு விசக்கடி வைத்தியராக இருந்தவர் சிறிசேனா என்ற சிங்களவராகும். அருவி வெட்டும் காலத்தில் புடையன், நாகம் என்று விசப்பாம்பகளினால் கடிபடும் விவசாயத் தொழிலாளர்களின் தொகை அதிகமாக இருக்கும். பாம்பு கடித்தால் புதூர் நாகதம்பிரான் புத்துமண்ணை கரைத்து கடிபட்டவரின் வாயில் ஊற்றிவிட்டு சிறிசேனாவிடம்தான் தூக்கிக் கொண்டோடி வருவார்கள். அவர் காசு வாங்காமல் வைத்தியம் பார்ப்பார்.

மாங்குளத்தில் சிறுவயதிலேயே வந்து சேர்ந்த பண்டிப் பீற்றர் மான், மரை, பன்றி இறைச்சி விற்கும் சிங்களவராவார். நெல் விதைத்த காலங்களில் நெற்பயிரைச் சாப்பிட வரும் பன்றிகள் பெருமளவு வேட்டையாடப்படும். எனவே பன்றி இறைச்சி மாங்குளத்தின் அயற்கிராமங்களான ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு, அம்பகாமம், மன்ன குளம், வன்னி விளாங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும். பன்றி இறைச்சி விற்பனை செய்ததால் பீற்றருக்கு பன்டிப் பீற்றர் என்று பெயர் வந்துவிட்டது. பன்டிப் பீற்றர் சேட்டோ மேல்துண்டோ உடம்பில் போட்டுக் கொள்ள மாட்டான். சாரத்தை சண்டிக்கட்டாக மடித்துக் கட்டி இரண்டு முடிச்சுப் போட்டு இறுக்கிக் கொண்டு வெறும் மேலோடு திரிவான். இவனைப் போல இன்னும் பலர். சிங்கள மாமா என அழைக்கப்படும் குடுமி கட்டிய பச்சைமிளகாய் விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரி. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற சினிமாப் பாடலைப் பாடியபடி திரியும் மாட்டுவியாபாரம் செய்யும் ராகம சிங்களவர்கள். இப்படித்தான் மாங்குளம் கிராமம் இருந்தது இயங்கியது. வன்னியின் பல கிராமங்களில் இதைப் போன்ற தமிழ்-சிங்கள மக்கள் இணைந்த வாழ்வுப் போக்கே காணப்பட்டது.

இப்படியே நாம் பேசும் எட்வினும் சிறுவயதில் மாங்குளத்தை வந்தடைந்து விட்டான். விதைத்து அறுவடை முடியும்வரை நெல்வயல்களில் வேலை செய்வான். காட்டு மிருகங்களிடம் இருந்து நெற்பயிரைக் காக்கப் போடப்படும் காவல் கொட்டில்களில் இரவு நேரத்தில் நாய்களோடு காவலிருப்பான். ஆக மிஞ்சினால் மாதச்சம்பளமாக அறுபது, எழுபது ரூபாய்கள் அவனுக்குக் கிடைக்கும். நெற்செய்கை முடிந்த கோடைக்காலங்களில் ஆட்களிடம் துவக்கை இரவலாக வாங்கி வேட்டையாடுவான். உடும்பு வேட்டைக்கு நாய்களுடன் போவான். இரண்டு மூன்று உடும்புகள் இல்லாமல் திரும்ப மாட்டான். உடும்பு சாப்பிட விரும்பினால் சனங்கள் எட்வினிடம்தான் சொல்வார்கள். ஐந்தோ பத்தோ கொடுத்தால் போதும். இவ்வளவுதான் தரவேண்டும் என்று அவன் கட்டாயப்படுத்த மாட்டான். எட்வின் உடும்பு பிடிக்க வெளிக்கிட்டால் குறைந்தது பத்து நாயாவது அவன் முன் பின்னாக அவனோடு நடைபோடும். எட்வின் ஆள் கட்டையாக இருப்பான் ஆனால் அகலமாக தோள்கள். திடகாத்திரமானவன். ஒரு காக்கி அரைக்காற்சட்டை, தோளில் ஒரு சாக்குப்பை, வாயில் வெற்றிலை இதுதான் அவனின் கோலம். ஒருமுறை தன் பன்னிரண்டு பதின்மூன்று வயதுடைய மகனோடு காட்டுக்கு வேட்டைக்குப் போனபோது கரடியிடம் அகப்பட்டு விட்டான். தனது மகனை பாதுகாப்பாக மரத்தில் ஏற்றிவிட்டு கடைசியாக தான் ஏறியபோது கரடி அவனை காலில் கடித்துப் பிடுங்கிவிட்டது. இதன்பின்பு எட்வின் ஒருகாலை நொண்டி நொண்டித்தான் நடப்பான்.

பொங்கல், தீபாவளி, வருசம் என்றால் ஊர்ச்சனங்கள் பொங்கல் சாப்பாடு கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுவான். ஒவ்வொரு வெள்ளியும் மாங்குளம் பிள்ளையார் கோயிலில் பொங்கல் மோதகம் வடை கடலை பஞ்சாமிர்தம் வாங்க அவன் கட்டாயமாக நிற்பான். அவன் பிறப்பால் கிறிஸ்தவன் என்றபோதிலும் தேவாலயத்தில் அவனை ஒருவரும் கண்டதில்லை. கழுத்தில் சிலுவையும் தொங்கியதில்லை. 1970களின் நடுப்பகுதியில் மாங்குளம் பகுதியில் கூட்டணிக் கூட்டங்களும் உதயசூரியன் கொடிகளும் தோன்றத் தொடங்கின. எட்வினின் கண்ணுக்கு முன்பாக பிறந்து வளர்ந்த ‘பொடியங்கள் கூட்டணிக்கு கோசமும் போட்டு தமிழீழமும் கேட்கத் தொடங்கியபோது எட்வின் அதுபற்றிக் கவலைப்படாமல் பேராற்று நெல்வயல்வெளிகளின் இரவுக்காவல் கொட்டில்களிலும் உடும்பு வேட்டையிலும் தீவிரமாய் இருந்தான். அவன் அரசியல்பற்றி அறியாதவன். அதுபற்றி அவன் கவலை கொண்டவனோ கதைப்பவனோ இல்லை. மாங்குளத்தில் அவனைச் சிங்களவன் என்று எவரும் அடையாளம் காண்பதுமில்லை. எட்வின் மாங்குளத்து ஆள் என்பதற்கு அப்பால் சனங்களுக்கு எந்த நினைப்புமில்லை. ஆனால் 1980களின் நடுப்பகுதியில் ஒரு தமிழ் ஆயுத இயக்கத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பொறுப்பாளர் எட்வினைச் சிங்களவனாய்க் கண்டான். உளவாளியாய சந்தேகித்தார். விளைவு எட்வினும் அவனது பதின்மூன்றோ பதினாலோ வயது நிரம்பாத மகனும் மாங்குளம் காட்டுக்குள் வைத்து கொலை செய்யப்பட்டனர். காட்டுக் கரடியிடமிருந்து தன் மகனையும் தன்னையும் காப்பாற்ற முடிந்த எட்வினால் தமிழீழவாதிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.



தமிழரசன்
- பெர்லின்
24.04.06

1 comment:

Anonymous said...

pulikalaippatriya ungal karuththukkalil enakku udanpaadillai.aanaal,ethumariyaatha,kuzhanthaikku oppaana manitha uyirkalai pariththavarkal yaaraayirunthaalum kandikkappada vendiyavarkal.-raavan rajhkumar-jaffna